மரபுவழி கதைகளில் இன்னொரு ஒரு கதையும் சொல்லப்படுவதுண்டு, பத்து திசைகளில் தேர் செலுத்தும் வல்லமை உடைய தசரதனுக்கும் கோசல நாட்டு அரசன் பானுமந்தன் மகள், கோசலைக்கும் திருமணம் நிச்சயமாகி இருந்தது. இதை நிச்சயம் செய்தவர், நம்முடைய கலகமுனி நாரதர். நாரதர் வந்தாலே கலகம் வரும் என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம். இங்கும் அதுப்போலவே நாரதர் திருமணத்தை நிச்சயம் செய்துவிட்டு, இராவணனிடம் வந்து இந்தத் திருமணம் நடந்தால் கோசலைக்கு பிறக்கும் பிள்ளையால் உனக்கு அழிவு நிச்சயம் என்று சொல்கின்றார். அதேவேளை, கோசலநாடு சென்று இராவணனால் இந்த திருமணம் நிறுத்தபடலாம் என்று பத்தவைத்து விட்டு போகிறார்.
உடனே தசரதன், பத்து கிரீடத்துக்கு அரசனான இராவணனோடு போர் புரிந்து வெற்றி பெறமுடியாது என, கோசல நாட்டில் திருமணத்தை வைக்காமல் கடல் நடுவில் யாருக்கும் தெரியாமல் திருமணத்தை நடத்துகிறார். கோசலையை தேடி இராவணன் கோசல நாடு சென்று அங்கும் கோசலை இல்லாதது கண்டு தன் நாடு திரும்பினான். வரும் வழியில் கடல் நடுவில் ஒரு நகரத்தில் கோசலை இருப்பதை காண்கின்றான். பெண்களை வீரர்கள் தாக்கக் கூடாதது என்பதால் உயிருடனேயே கடத்தி வருகின்றான். தன் தேசம் வந்ததும் அவளைக் கொலை செய்யும்படி கட்டளை இடுகின்றான்.
ஆனால், எல்லா சாஸ்திரங்களையும் கற்ற மண்டோதரி, பெண்ணை கொலை செய்வது அழிவுக்கு ஒப்பானது ஆகும், என்று சொல்லி கோசலையை காப்பாற்றுகிறாள். ஆனால், தன் கணவன் உயிருக்கும் அவளுக்கு பிறக்கும் மகனால் ஆபத்து வர கூடாது என்பதற்காக தசரதனுக்கு புத்திர பாக்கியம் ஏற்படாதவாறு சாபம் இடுகின்றாள். விதியை மாற்றி அமைக்க விரும்பாத பார்வதி, பரமேஸ்வரர், .மண்டோதரிக்கும், இராவணனுக்கும் பிறக்கும் பெண் குழந்தையாலேயே உங்களுக்கு அழிவு என்று சாபம் இடுகின்றார்கள். அதனால் தான் மண்டோதரிக்கும் இராவணனுக்கும் பிறக்கும் மூத்த பிள்ளையான சீதையை ஜனகன் வயல் பூமியில் கொண்டு போய் விட்டுவிட்டதாக மரபுவழி கதைகள் கூறுகின்றன.
மண்டோதரி-இராவணன் தம்பதிகளுக்கு மேகநாதன், அதிகயா மற்றும் அக்சயகுமாரர் ஆகிய மூன்று மகன்கள் பிறந்தனர். விஷ்ணுவின் அவதாரமான இராமபிரான் வனவாசம் சென்றிருந்த வேளையில் சீதாதேவியை கடத்தினான் இராவணன். மண்டோதரி சீதாதேவியை உடனடியாக இராமனிடம் திருப்பி அனுப்புமாறு பலமுறை வேண்டுகோள் விடுத்தாள். ஆனால், இராவணன் எதையும் கேட்கவில்லை. சீதா தேவியின் தலையை துண்டிப்பதற்காக தன்னுடைய வாளை ஓங்கினான் இராவணன். ஆனால், ஒரு பெண்ணைக் கொலை செய்வதென்பது கொடும் பாவச்செயல். ஆகவே, சீதா தேவியை இராவணன் கொல்லக்கூடாது என்று மன்றாடிக் கேட்டுக் கொண்டு இராவணனின் கையைப் பிடித்து அந்த பாவச்செயலைத் தடுத்து நிறுத்தினாள் பேரழகியான மண்டோதரி. இது, இராவணனுக்கு அழிவைக் கொண்டு வரும் என்று மண்டோதரி நன்கு அறிந்திருந்தாள் என வால்மீகி ராமாயணத்தில் குறிபிடப்பட்டுள்ளது.
மண்டோதரி, சீதையை சாக்கி மற்றும் ரோகிணி ஆகிய கடவுளர்களுடன் ஒப்பிட்டு இராவணனிடம் முறையிட்டாள். மண்டோதரியை விட சீதாதேவி அழகில் குறைந்தவராக இருந்தாலும், இராமன் மீது சீதை கொண்டிருந்த பக்தியை மிகவும் மதித்திருந்தாள். சீதாதேவியைத் தேடிவந்த அனுமன் கூட இராவணனின் அந்தப்புரத்தில் மண்டோதரியைப் பார்த்தவுடன் இவர்தான் சீதாதேவி எனத் தவறாக எண்ணிக்கொண்டான் என வால்மீகி ராமாயணத்தில் குறிப்பிடப்படுகிறது. அமைதியான முறையில் சீதையை திரும்பப் பெறச் செய்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்த பின்னர், இராமர் இலங்கையின் மீது போர் தொடுப்பதை அறிவித்தார். இராமனுடனான இறுதிப் போருக்கு முன்னர் கூட மண்டோதரி இராவணனிடம், சீதா தேவியை திரும்ப அனுப்புமாறு கேட்டுக்கொண்டாள், ஆனால், அந்த முயற்சியும் தோல்வியடைந்தது. இறுதியாக, தன்னுடைய கணவனுக்கு உண்மையுள்ள மனைவியாக இறுதிக்கட்டப் போரில் இராவணனுக்குத் துணை நின்றாள். மேலும், இந்திரனை வென்று இந்திரஜித் என்ற பட்டத்துடன் இருந்த, தன் மகன் மேகநாதனையும் கூட, இராமருடன் சண்டையிட வேண்டாம் என்று கேட்டுக் கொண்டாள்.
மேலும் வால்மீகி இராமாயணத்தில், யுத்த காண்டத்தில், மண்டோதரியின் அழிவு சொல்லப்பட்டு இருக்கிறது. இராவணனுடைய அனைத்து மகன்களும், வீரர்களும் போரில் இறந்து விட்ட பின்னர், தன்னுடைய வெற்றியை உறுதி செய்யும்படியாக ஒரு அக்னி யாகத்தை நடத்த விரும்பினான் இராவணன். இதை அறிந்த இராமர், உடனே அனுமனையும், வானர இளவரசரான அங்கதனையும் கொண்ட வானர வீரர்களின் படைகளை அனுப்பி அந்த யாகத்தைக் கலைக்க ஆணையிட்டார். இராவணனின் அரண்மனையில் பெரும் சேதத்தை வானரங்கள் ஏற்படுத்தினாலும், இராவணன் தன்னுடைய யாகத்தைத் தொடர்ந்து செய்து வந்தான். இந்தச் சமயத்தில், அங்கதன் மண்டோதரியின் தலைமுடியைப் பற்றி அவளை இராவணன் முன் இழுத்து வந்தான். மண்டோதரி தன்னைக் காப்பாற்றும் படியும், இதே செயலைத் தான் இராவணன், இராமனின் மனைவிக்கு செய்து கொண்டிருப்பதையும் நினைவுப்படுத்தினாள். இதனால், கோபமுற்ற இராவணன் தன்னுடைய யாகத்தை நிறுத்தி விட்டு, அங்கதனுடன் சண்டையிடுவதற்காக தன்னுடைய வாளால் பாய்ந்தான். பலம் பொருந்திய இராவணனை யார் எதிர்க்க முடியும்?!
எனினும், வந்த காரியத்தை முடித்து விட்டத் திருப்தியுடன், மண்டோதரியை விட்டு விட்டு அங்கதன் தப்பிச் சென்றான். மண்டோதரி மீண்டும் சீதையை இராமனிடம் சேர்ப்பிக்கும்படி கேட்டாள், அப்பொழுதும் இராவணன் மறுத்து விட்டான்.
மண்டோதரி கணவனுடையை நன்மைக்காக இழக்கக்கூடாதவற்றை எல்லாம் வாழ்வில் இழக்கின்றாள். சீதையைத் தேடி வந்த அனுமன் கையால் தன் ஆசைமகன் அக்சயகுமாரன் இறந்தப்பொழுது கூட இராவணன் மேல் அவள் கோபம் கொள்ளவில்லை. இந்திரனை வென்று சிறைப் பிடித்து வந்த தன் வீர மகன் இந்திரஜித் லட்சுமணனால் கொல்லப்பட்டப்பொழுது கூட அவள் இராவணன் மீது கோபம்கொள்ளவில்லை. கணவன் வாழ்வுக்காகவே கடைசிவரை துணை இருந்த மண்டோதரி இன்னொரு பெண்ணுக்காக இரங்கி கோசலையை விடுத்ததால், தன்னால் உயிர்பிச்சை பெற்றுவாழ்ந்த கோசலைக்கு, யாகத்தின் மூலம் பிறந்த பிள்ளையால் தன் குலமே அழிந்துவிட்டதை எண்ணி வருந்தினாள்.
இராவணனுக்கு எப்போதும் நல்வழிகளையே போதித்து வந்த மண்டோதரி, சீதாதேவியை சிறைப் பிடித்து வந்தது தவறு என்றும், சீதாதேவியைக் கவர்ந்து வந்தது அறத்துக்குப் புறம்பானது எனவும் சீதாதேவியை விட்டுவிடுமாறு ராவணனுக்கு பலமுறை அறிவுறுத்தினாள். ஸ்ரீராமன் குறித்து எச்சரித்தும், மாரீசனின் வார்த்தையை நம்பி ஏமாற வேண்டாம் என அறிவுரைக் கூறி பலமுறை திருத்த முயன்றாள். மேலும், அறத்துடன் இணைந்தவருக்கு ஆறறிவற்ற உயிரினங்களும் கூடத் துணை நிற்கும். ஆனால்,அறத்திலிருந்து விலகியவரை, உடன்பிறப்புகள் கூட விலக்கி வைக்கும் என்பதை உணர்த்தினாள். அதேச்சமயம் இராமன் சாதாரண மனிதன் அல்ல என்றும், அவர் ஸ்ரீ விஷ்ணுவின் அவதாரம் என்பதையும் மண்டோதரி நன்கு அறிந்திருந்தாள். ஆனால் பெண்ணாசைக் கொண்ட தனது கணவர் இராவணனை அழிக்கவே, இராமன் அவதாரம் எடுத்திருப்பதை மண்டோதரி உணர்ந்திருக்கவில்லை.
இராவணனுக்கும், இராமனுக்கும் நிகழ்ந்த யுத்தத்தில் இராமபாணம் பாய்ந்து இராவணன் மண்ணில் வீழ்ந்ததும், தனது கணவரின் உடல் மேல் விழுந்து கதறி அழுதாள். பலவாறு புலம்பி அழுது ஏக்கம் கொண்டு எழுந்து பொன் அணிகலன்கள் பொருந்தியிருக்கும் இராவணனின் மார்பினைத் தன்னுடைய தளிர் போன்ற கைகளால் தழுவி அவன் மீது வீழ்ந்து உயிர்நீத்தாள் மண்டோதரி. எண்ணற்ற சிறந்த நற்குணங்கள் கொண்டிருந்தும் தனது கணவரின் தீய குணத்தினால் மிகத் துயர முடிவை அடைந்தாள். இவள் சீதைக்கு நிகராக இருந்தாலும், மண்டோதரியின் நற்குணங்களை அறியாமல் போனது இராவணின் துரதிர்ஷ்டம். இது புராண இதிகாசக் கதையாக இருந்தாலும் தற்போதைய பல்வேறு சம்பவங்களுக்கும், பதில் அளிக்கும் விதத்திலேயே உள்ளது.
ஆனால் நாம் இராவணனை பற்றி நினைக்கும் போதே , ஒரு கொடுரமான அசுரன் பல்வேறு அநியாயங்கள் செய்தவன் பிறன்மனை கவர்ந்தவன் என அறியபட்டலும்,இராவணன் ஒரு சிறந்த கலைஞன், இசையை இரசிப்பதிலும், பாடுவதிலும், வீணையை மீட்டுவதிலும் இராவணனுக்கு இணையாக யாரும் இல்லை எனச் சொல்லலாம். மேலும், இராவணன் எதிர்காலம் அறிந்தவன் என்றும் சொல்லப்படுபவன். ஒருவேளை இராம, லட்சுமணன் வெறும் மனிதர்களாக இருந்தால், அவர்களை வெல்வது எனக்கு எளிது. ஆனால், அவர்கள் அவதாரங்களாக இருந்தால் அவர்களின் அம்புகளுக்கு பலியாகி முக்தி / மோட்சம் அடைவேன் என்றும் அறிந்திருந்தான் என்றும் சொல்லப்படுவதுண்டு.
இராவணனுக்கு உண்மையிலேயே பத்து தலைகள் கிடையாது. இராவணனின் தந்தை வைச்ரவ மகரிஷி ஓர் அணிகலனை இராவணனுக்கு பரிசளித்தார். அதை அணியும் போது, ஒளியின் எதிரொளியாக பத்து தலைகள் உள்ளது போலத் தெரியுமாம். உண்மையில் இராவணனுக்கு எண்ணற்ற தலைகள் இருக்கிறது என்பதை போன்ற தோற்றத்திற்கு இதுதான் காரணம் என செவிவழி கதைகளில் சொல்லப்படுவதுண்டு. அதேப்போல் அட்புத்தா இராமாயணதில் (Adbhuta Ramayana), இராவணனுக்கு அண்ணன் ஒருவன் இருந்ததாகவும், அவன் பெயரும் இராவணன் தான் என்றும் அவன் ஆயிரம் தலை இராவணன் என்றும் கூறப்பட்டுள்ளது. ஆனால், இது எந்த வகையில் உண்மை என்று தெரியவில்லை. இராவணன் ஆயுர்வேத மருத்துவம் நன்கு கற்றுணர்ந்தவன் எனவும், அதைப்பற்றி பல புத்தகங்கள் எழுதியதாவும், மாமிசம் மற்றும் மாட்டிறைச்சி இவைகளை உண்பதால் மனிதர்களுக்கு ஏற்படும் 98 வகையான நோய்களை பற்றியும் இராவணன் ஒரு நூல் எழுதியுள்ளான் எனவும், மேலும் மண்டோதரி கர்ப்பிணியாக இருந்த போது, குழந்தைகளுக்கு ஏற்படும் நோய்கள் குறித்தும், அதற்கான மருத்துவம் குறித்தும் கூட இராவணன் புத்தகம் எழுதியிருந்தானாம். எது எப்படியோ ஒரு நல்ல மனிதனும், அவன் மனைவியும் அவனின் தீய குணத்தால் அவனும் அழிந்து அவன் குலமும் அழிந்து நாசமானது
.http://rajiyinkanavugal.blogspot.com
0 comments:
Post a Comment